
குருந்தி விகாரை மற்றும் தண்ணிமுறிப்பு காணிப் பிரச்சினை.
Published
குருந்தி விகாரை மற்றும் தண்ணிமுறிப்பு காணிப் பிரச்சினை.
குருந்தி விகாரை மற்றும் அதனை அண்மித்துள்ள தண்ணிமுறிப்பு கிராமவாசிகளின் காணிகள் குறித்து இந்நாட்களில் அதிக அளவில் பேசப்படுவதுடன் அது தொடர்பான விவாதத்துக்குரிய ஏராளமான தகவல்கள் சமூக மயப்படுத்தப்பட்டு வருகின்றன.
தண்ணிமுறிப்பு கிராம மக்களின் காணிகளை பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் பிரதேசத்துக்கு மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்துக்கு உரித்தாக்கிக் கொள்ளல் குறித்து சமூகத்தின் பல்வேறு நபர்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் முதலாவதாக பிரச்சினையின் அடிப்படையாக இருக்கும் குருந்தி விகாரை குறித்த தகவல்களை ஆராய வேண்டும்.
குருந்தி விகாரையின் வரலாறு.
குருந்தி தொல்பொருளியல் ஆராய்ச்சி நிலையமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பிரதேசமான பத்துவ பிரதேசச் செயலகத்துக்குரிய, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவின் நாகச்சோலை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அட்டகக்கதைகள் மற்றும் வரலாற்று நூல்களில் "குருந்தக","குருந்த",குருஞ்ஞ பாசக" போன்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளதும் இப்பிரதேசமேயாகும்.
அனுராதபுர இராச்சிய காலகட்டத்தில் வல்லபநாக மன்னன் கி. மு 109-104 களில் "குருஞ்ஞ பாசக" எனப்படும் இவ்விகாரையை நிர்மாணித்ததாகவும், முதலாம் அக்ரபோதி மன்னன் கி.பி 571-604 களில் "குருந்தக" விகாரையை மீளப் புனரமைத்து 'குருந்த வாவி" என்னும் குளத்தையும் தென்னஞ்சோலை ஒன்றையும் நிர்மாணித்து சமர்ப்பணம் செய்ததாகவும், முதலாவது விஜயபாகு மன்னன் கி.பி 105-110 களில் குருந்தி விகாரைக்கு பல்வேறுபட்ட அனுசரணைகளை வழங்கியதாகவும், 2ஆம் பராக்கிரமபாகு மன்னன் கி.பி 1236 1270 களில் இங்கு நிறுவப்பட்ட கலிங்கத்து மாகனின் படைமுகாமை நிர்மூலமாக்கியதாகவும் மகா வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1905 இன் தொல்பொருளியல் ஆராய்ச்சி அறிக்கைகளில் குறுந்தி விகாரை எல்லையில் கண்டெடுக்கப்பட்ட மூன்றாம் மஹிந்த மன்னனுக்கு சொந்தமான கல்வெட்டு ஒன்று குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கல்வெட்டில் இப்பிரதேசம் குருன்கம என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே தொல்பொருளியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். குளத்தில் நிலவிய தண்ணீர்ப் பிரச்சினை ஒன்று தீர்க்கப்பட்டு, குறித்த கல்வெட்டு செதுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குருந்தி விகாரை கட்டடத்தொகுதி குறித்த தொல்பொருளியல் ஆய்வாளர் திரு. எச்.சி.பி.பெல் அவர்களின் அறிக்கையிலும் குடியேற்றவாதக் காலப்பகுதியில் சிவில் அதிகாரிகளாகக் கடமையாற்றிய திரு. ஹென்றி பார்க்கர், திரு.ஜே.பீ. லெவிஸ் ஆகியோரின் அறிக்கைகளிலுக் மேலதிகத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குருந்தி விகாரையின் எல்லையையும்,புதிய தொல்பொருளியல் பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தின் எல்லையையும் அடையாளம் காணுதல்
குருந்தி விகாரை மற்றும் குருந்தி விகாரையின் தொல்பொருளியல் இடிபாடுகளைப் பாதுகாத்தல், தொல்பொருளியல் துறையின் புதிய எல்லைகளை ஆய்வு செய்தல் ஆகிய செயற்பாடுகள் வவுனியாவில் அமைந்துள்ள தொல்பொருளியல் பிராந்திய அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டன. குடியேற்றவாதக் காலப்பகுதியில் குருந்தி விகாரை வளாகத்தின் 78 ஏக்கர் நிலப்பரப்பு 1933 மே 12ஆம் திகதிக்குரிய சிறப்பு வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
87 வருடங்களின் பின்னர் 2020 நவம்பர் 26, 27, 28, 29 ஆம் திகதிகளில் பழைய எல்லைகளை கண்டு பிடிக்கும் பணி வவுனியா தொல்லியல் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மற்றும் நில அளவை திணைக்களத்தினால் ஒன்றிணைந்து ஆரம்பிக்கப்பட்டது. அதன் போது தொண்ணூறு வீதமான பழைய எல்லைக் கற்கள் அடர்ந்த வனப்பகுதியினுள் சேதங்களின்றி கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பழைய எல்லைக்குள் உட்படுத்தப்படாத தொல்பொருளியல் சான்றுகள் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்திக்கொள்ளப்பட்டதை அடுத்து, 2020 டிசம்பர் 02 அன்று, வவுனியா தொல்பொருளியல் துறை அலுவலக ஆய்வு உத்தியோகத்தர்கள், குருந்திவாவிக்கு கீழ்த்திசையில் உள்ள, காடுகளால் மூடப்பட்ட பிரதேசம் மற்றும் குருந்தி ஸ்தூபி உள்ளிட்ட ஆங்காங்கே பரவலாகக் காணப்பட்ட சான்றுகளைச் சூழ ஆய்வுகளை மேற்கொண்டதாகவும். அதன் போது பழைய குருந்தி ஸ்தூபி வளாகத்தின் நினைவுச்சின்னங்கள் சுமார் 229 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது என்றும் வவுனியா தொல்பொருளியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிதாக அவதானிக்கப்பட்ட நினைவுத்தூபிகள் மற்றும் இடிபாடுகளில்,
01. அனுராதபுர யுகத்தின் பிற்பகுதியில் கி.பி 946-954 வரை ஆட்சி செய்த நான்காம் உதய மன்னனுக்கு சொந்தமான ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
(அபயகிரி மடத்துடன் இணைந்த சிறிசங்கபோ ரஜமகா விகாரை என்னும் மடம் குறித்தும், அங்கு நடைபெறும் சமயச் சடங்குகள் குறித்தும், பௌத்த பிக்குகளின் பொது சம்மதத்துடன் மூன்று நிக்காயகளினதும் நல்லிணக்கம் குறித்த கருத்தாடல் மற்றும் அபயகிரி விகாரையின் அதிகாரிகளினால் இந்த இடத்தின் தியானமனைக்கும், சிலைமனைக்கும் வழங்கப்பட்ட பரிசுகள்,மேற்கொள்ளப்பட்ட சடங்குகள்,வழிபாடுகள் குறித்த ஒரு கல்வெட்டு)
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு முதன் முதலில் ஹென்றி பார்க்கர் என்பவரால் அறிக்கைப்படுத்தப் பட்டிருந்ததுடன், 1949 தொல்பொருளியல் ஆய்வு அறிக்கையில் இக் கல்வெட்டு குறித்து 1931 இல் பேராசிரியர் சி.ஈ. திரு.கொடகும்புர பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
02. முதல் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் எல்லை வகுக்கப்பட்ட 78 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள 78 ஏக்கர் நிலத்துக்கு வெளியே காவற்றூண்கள், கற் கோபுரங்கள், பழைய செங்கல், ஓடுகளாலான ஒரு கட்டிடத்தின் சான்றுகள், செங்கல் கொண்டு கட்டப்பட்ட ஏறத்தாழ 10 கட்டிடங்களின் சான்றுகள்.
3. குருந்தி வாவி குளக்கட்டின் வடதிசையில் அமைந்துள்ள புராதன இரும்புத் தொழிற்சாலைப் பிரதேசம். (குளத்தின் அபிவிருத்தி செயல்பாடுகளின் போது குறிப்பிட்ட பிரதேசம் அழிவுக்குள்ளாகியுள்ளது)
4. புராதனமான கற்பாலம் ஒன்றுக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா தொல்பொருளியல் ஆராய்ச்சி அலுவலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். குருந்தி பிரதான தொல்பொருளியல் தூபியிலிருந்து நானூறு யார் தூரத்திற்கு (365.76 மீட்டர்) பரவிய ஒரு நிலப்பகுதி அத்தொல்பொருளியல் வளாகத்துக்குரியது என்பதையும் தொல்பொருளியல் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
புதிய அளவுகோல்கள் மற்றும் காணப்படும் தொல் பொருளியல் சான்றுகளின் அடிப்படையில் 1933 ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 78 ஏக்கர் தொல்பொருளியல் பாதுகாப்பு பிரதேசம் உள்ளடங்கலான 229 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், அதனூடாக புதிய எல்லை ஒன்றை வரையறுத்திருப்பதாக வவுனியா தொல்பொருளியல் ஆராய்ச்சி அலுவலகம் குறிப்பிடுகின்றது
புதிய தொல்பொருளியல் ஆராய்ச்சி எல்லையும் தண்ணிமுறிப்பு கிராமவாசிகளின் காணி இழப்பும்
தொல்பொருளியல் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூலம் புதிய தொல்பொருளியல் எல்லை ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் நிறுவப்பட்டதால் தமது பழைய காணிகள் 40 ஏக்கர்கள் அளவில் அந்த புதிய தொல்பொருளியல் ஆராய்ச்சி எல்லைக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தண்ணிமுறிப்பு கிராமத்தின் விவசாயக் கழகப் பிரதிநிதிகள் கூறுகின்றார்கள்.
தண்ணி முறிப்பு விவசாயக் கழகத்தின் தவிசாளர் திரு.எஸ் சசிகுமார் தமது கிராமத்தவர்களின் காணிகள் இழப்பு தொடர்பாக இவ்வாறு கூறுகிறார்:
Mr. S Sashikumar - President of Thannimuruppuwa Farmers' Organization
"குருந்தி தொல்பொருளியல் தளம் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் அங்கு இருந்ததை நாம் அறிவோம். அந்த தொல்பொருளியல் ஆய்வுத் தளத்துக்கு நாங்கள் என்றும் எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை. போரின் போது கூட, தொல்பொருளியல் தளத்தின் கட்டிடங்களை யாரும் சேதப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு எவருக்கும் அவ்வாறான சேதங்களைச் செய்வதற்கு இடமளிக்கவில்லை.
குருந்தி விகாரை என்று அழைக்கப்பட்டாலும் நாம் அந்த இடத்தை குருந்தமலை என்றே அழைத்தோம். நம் மக்களில் பல தலைமுறையினர் அந்த இடத்தில் வழிபாடுகள் செய்து வந்தனர்..
எங்களுடைய பழைய கோவில் ஒன்று அங்கு இருக்கிறது என்றே தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். 1933ல் வெள்ளையர்கள் காலத்தில் குருந்தமலையின் 78 ஏக்கர் நிலப்பகுதி தொல்பொருளியல் ஆய்வுத் தளமாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டன. அந்த எல்லைக்கற்கள் இன்றும் காணப்படுகின்றன. அந்தக் கற்களால் இடப்பட்ட எல்லைகள் நாம் நன்கு அறிவோம். அந்தக்காலத்தில் தொல்பொருளியல் எல்லையை நிர்ணயம் செய்வதற்காக ஒவ்வொரு 50 அடிக்கும் கற்கள் இடப்பட்டன. எங்கள் மக்கள் அந்தப் பகுதியில் விவசாயம் செய்யச் செல்லவில்லை.
ஆனால் தற்போது குருந்தமலையில் புதிதாக விகாரை ஒன்றை நிர்மாணிக்க வந்த பிறகுதான் பிரச்சினை உருவானது.
பழைய எல்லையில் விகாரை நிர்மாணிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை . ஆனால், 2020-ஆம் ஆண்டு முதல் விகாரை நிர்மாணிப்பதாகக் கூறி புதிதாக அளவைப்பணி நடந்தது. அந்த அளவைகள் செய்யும் போது, விகாரைக்கு புதிதாக 229 ஏக்கர் தேவை என்று சொல்கிறார்கள். அவ்வாறு கூறி எமது பழைய கிராமங்களில் மக்கள் குடியேறியிருந்த காணிகளையும் நாம் பயிரிட்ட வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்பொருளியல் திணைக்களம் பாதுகாக்கப்பட தொல்பொருளியல் வனப்பிரதேசமாக அறிவித்து புதிய கற்களை நட்டது.
புதிதாக கற்கள் இடப்பட்ட எல்லைப்பரப்பினுள் எமது விவசாயிகளின் காணிகள் சுமார் 40 ஏக்கர்கள் அளவில் உள்ளடக்கப்படுகின்றன. நாம் 1956-ல் நிர்மாணித்த நெற்களஞ்சியம், பழைய வீடுகளின் எல்லைகள், பழைய கிணறுகள், பழைய நீர்ப்பாசன திணைக்கள கட்டடங்கள் போன்றவை அந்த எல்லைக்குள் அடங்குகின்றன. 1933 இல் புராதன தொல்பொருளியல் ஆராய்ச்சி எல்லையான 78 ஏக்கருக்குள் எவ்வாறான விகாரைகளை நிர்மாணித்தாலும் அதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
எமது கிராம மக்கள் 1953 இலும் மற்றும் அதற்கு முன்னரும் குடியேறி இருந்த காணிகள் கிராமங்களை உள்ளடக்கி சமீபத்தில் இப்போது மூன்று வருடங்களுக்கு முன் தொல்பொருளியல் கற்களை இட்டு புதிதாக தொல்பொருளியல் எல்லை ஒன்றை நிர்மாணித்து எமது மக்களுக்கு நடத்தப்படும் அநியாயத்தை நிறுத்துமாறு மட்டுமே நாம் கேட்கிறோம்."
"அவ்வாறன்றி எமக்கு இனப்பிரச்சினை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு அவசியமும் இல்லை.இந்தக் காட்டுக்குள் விகாரை ஒன்றை நிர்மாணித்தாலும் யாரும் வரப்போவது கூட இல்லை.அவ்வாறிருக்க விகாரைக்கான இன்னும் 229 ஏக்கர்களை கையகப்படுத்துவதால் கிடைக்கப்போகும் பயன் என்ன?
தொல்பொருளியல் பாதுகாப்புப் பிரதேசம் என்று புதிதாக கற்கள் இடப்பட்டுள்ள எல்லைக்குள் தான் குருந்தமலைக்குளம் அமைந்திருக்கின்றது. எங்களது வயல்களின் ஒரு பகுதியும் அதனுள்ளேயே அமைந்திருக்கின்றது. குளத்தை தொல்பொருளியல் பாதுகாப்பு வனப்பிரதேசத்திற்கு கையகப்படுத்தியதன் பின் எங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கூட முடியாமல் போயுள்ளது. முன்பிருந்தவாறு 78 ஏக்கர்கள் விகாரைக்கு நன்கு போதுமானதாகும். தொல்பொருளியல் ஆய்வு அதிகாரிகளும் விகாரையின் பிக்குவும் ஒன்றிணைந்து தான் இம்மக்களுக்கிடையே பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று தான் எமக்கு தோன்றுகிறது.
அவ்வாறன்றி பழைய காணிப்பரப்பினுள் விகாரையை விஸ்தரிப்பதற்கு நாம் இவ்வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை."
தண்ணிமுறிப்பு குடியிருப்புகள் மற்றும் போர் காரணமாக குடியிருப்புகள் இழக்கப்பட்டமை
தண்ணிமுறிப்பு கிராமத்தின் குடியிருப்புகள் மற்றும் கிராமவாசிகளின் காணிகள் இழக்கப்பட்டமை குறித்து கிராமத்தில் வசிக்கும் திருமதி பாஸ்கரன் சுசீலா தேவி இவ்வாறான ஒரு கருத்தையே முன் வைக்கிறார்.
Mrs. Baskaran Susiladevi
"1984 இல் நாம் தண்ணிமுறிப்பில் வசித்தோம்.அக்காலத்தில் தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான் குளம் எனப்படும் இரண்டு கிராமங்கள் குருந்தமலை எல்லைக்குள் அமைந்திருந்தன. அக்கிராமங்களில் சுமார் 75 குடும்பங்கள் அளவில் வசித்து வந்தார்கள். அக்காலத்தில் எமது கிராமத்தில் தரம் 5 வரையிலான ஒரு பாடசாலை இருந்தது. நீர்ப்பாசன அலுவலகம் ஒன்றும் தபால் நிலையம் ஒன்றும் இருந்தன. நாம் அக்கிராமத்தில் மிக அழகான முறையில் வாழ்ந்து வந்தோம். ஆனால், போரின் போது இராணுவம் நமது கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது. பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் என்று எண்ணி உலங்கு வானூர்திகள் மூலம் கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியது. எமக்கு கிராமங்களில் வசிக்க முடியாமல் போனது. நாம் கிராமங்களை விட்டு வெளியேறினோம். ஒரு பகுதியினர் முல்லைத்தீவு நகருக்கு சென்றனர். இன்னொரு பகுதியினர் மன்னார் மடு பிரதேசத்திற்கு சென்றனர். அவ்வாறு சென்று முகாம்களில் தான் நாம் வசித்து வந்தோம்.
1984 இல் நாம் கிராமங்களை விட்டு வெளியேறும் போதும் தொல்பொருளியல் ஆய்வுத் திணைக்களத்தினால் இப்போது புதிதாக கற்கள் இடப்பட்டுள்ள எல்லைக்குள்ளேயே எமது வீடு வாசல்கள் அமைந்திருந்தன. எமது கிராமத்தின் பாடசாலை, தபால் நிலையம், நீர்ப்பாசன அலுவலகம், நெற்களஞ்சியம் போன்றவை இருந்தன. நாம் அந்த எல்லைக்குள் நெற்பயிர்ச் செய்கை மற்றும் சேனைப் பயிற் செய்கைகளை மேற்கொண்டோம். ஆயினும் இப்பொழுது தொல்பொருளியல் ஆய்வுத் திணைக்களம் நாம் பயிர் செய்து வந்த எல்லைக்குள் பயிர்ச்செய்கை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை. அவ்வாறு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டால் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள். அவ்வாறு எமது கிராமத்தைச் சேர்ந்த அனேகமானோரை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளார்கள்.
நாம் வசித்து வந்த பகுதி எவ்வாறு தொல்பொருளியல் பாதுகாப்புப் பிரதேசமாக மாறியது என்று எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது ஓரிரண்டு வருடங்களாகத்தான் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு தொல்பொருளியல் பாதுகாப்பு பிரதேசத்தை பிரித்தெடுக்கத் தோன்றியிருக்கின்றது. இப்பிரச்சினை குறித்து நாம் இறைவனிடம் மட்டுமே முறையிட வேண்டி உள்ளது. எங்களுக்கு வேறு எந்த ஒரு இடத்தில் இருந்தும் நியாயம் கிடைப்பதாகத் தெரியவில்லை."
குருந்தி விகாரையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படுதல்
குருந்தி விகாரையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் நிலவும் காணிப்பிரச்சினை குறித்து குருந்தி விகாராதிபதி, வட மாகாண பிரதம சங்க நாயக்க, வணக்கத்திற்குரிய கல்கமுவே சந்தபோதி தேரரிடம் வினவினோம்.
Galgamuwe Santabodhi Thero
"குருந்தி விகாரைத் தொகுதி வட மாகாணத்தில் காணப்படும் பிரதானமான ஒரு விகாரைக் கட்டடத் தொகுதியாகும் இந்த விகாரைக் கட்டடத் தொகுதி வரலாற்று நூல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. குருந்தி அட்டுவாவ (குருந்தி வர்ணனை) என்பது குருந்தி விகாரையை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. விகாரைக் கட்டடத் தொகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த போதே விகாரையின் புனரமைப்பு பணிகள் எனது ஆலோசனையின் கீழ் 2021 ஜனவரி 18இல் ஆரம்பிக்கப்பட்டன. விகாரையின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க வரும்போது விகாரைக் கட்டடத் தொகுதி அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருந்தது.
நாம் காட்டைச் சுத்திகரித்து விகாரையின் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தோம். அவ்வாறு ஆரம்பித்து விகாரையின் தொல்பொருளியல் சார்ந்த இடிபாடுகளைச் சுத்திகரிக்கும் போது தான் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு பிரச்சினை தோன்றியது.தண்ணிமுறிப்பு கிராமத்தின் கிராமவாசிகளுக்கு விகாரையின் புனரமைப்பு பணிகள் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் தண்ணிமுறிப்பு கிராம மக்கள் விகாரைக் கட்டடத் தொகுதியின் புனர் நிர்மாணப் பணிகளுக்குக்கூட உதவி செய்தார்கள்.
புனரமைப்புப் பணிகளின் போதுதான் 1933 இல் வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட எல்லைக்கு அப்பாலும் தொல்பொருளியல் இடிபாடுகள் இருக்கின்றமை உறுதியானது. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டதன்பின் தண்ணிமுறிப்பு கிராம மக்களும் 2022 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் புதிய தொல்பொருளியல் எல்லைக்குள் தொல்பொருளியல் கற்களை இட உதவி செய்தார்கள். அவ்வாறு உதவிக் கொண்டிருக்கும் போது ஒரு தமிழ் அரசியல் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வந்து மக்களது உள்ளங்களில் தப்பான தகவல்களை புகுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மக்களும் விகாரை குறித்த தவறான ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டனர். உண்மையில் தண்ணிமுறிப்பு கிராம மக்கள் ஆரம்ப கட்டத்தில் விகாரையின் புனரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இப்போது அந்த தொல்பொருளியல் சார்ந்த நிலங்களை கையகப்ப் படுத்திக் கொண்டிருந்த ஒரு சிலர் தான் இந்த பிரச்சனையை உருவாக்க முன்னின்று செயற்படுகின்றனர். அவர்களுக்கு தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் உள்ளன. அதற்கிடையில் பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுப்பிரதேச நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டு அவற்றுக்கும் உரிமை கோருகின்றனர்.
இப்போது அந்த தொல்பொருளியல் எல்லைக்குள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேச எல்லைக்குள் கிராம மக்களின் பழைய வயற்காணிகள் எதுவும் உள்ளடங்கவில்லை. இப்போது மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு காட்டை அழித்து, சுத்திகரித்து கையகப்படுத்தப்பட்டுள்ள மிகச் சிறிய நிலப்பரப்பே உள்ளடக்கப்பட்டுள்ளது. எவருக்கும் இது சம்பந்தமாக ஆய்ந்தறிந்து கொள்ள முடியும்."
குருந்தி விகாரை மற்றும் தண்ணிமுறிப்பு காணிகள் குறித்த அரசியல்வாதியர் கருத்து
முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு விவசாயிகளின் பயிர்ச்செய்கை நிலங்களை மீளப் பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கின்றார்கள். முன்னாள் வடமாகாண மாகாண சபை உறுப்பினர் திரு. துரைராசா ரவிகரன் தண்ணிமுறிப்பு மக்களின் பயிர்ச்செய்கை நிலங்களை பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் பிரதேசத்திற்குள் உள்ளடக்கக் கூடாது என்று கோரிக்கையை முன் வைத்து 21 ம் திகதியும் குருந்தி விகாரைக்கு உள்நுழையும் நுழைவாயிலுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டார்.
குருந்தி விகாரை மற்றும் தண்ணிமுறிப்பு மக்களின் பயிர்ச்செய்கை நிலங்களை பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுப் பிரதேசத்திற்கு கையகப்படுத்துதல் குறித்து திரு. ரவிகரனிடம் வினவப்பட்ட போது அவர் கூறியதாவது,
"யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பின்னர் 2020 வரை தண்ணிமுறிப்பு கிராம மக்களே குருந்துமலை தொல்பொருளியல் பிரதேசத்தை பாதுகாத்து வந்தனர். பல வருடங்களாக நமது தமிழ் மக்கள் வணக்க வழிபாடுகள் செய்து வந்த ஒரு கோயில் தான் இப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது.
ஆனால் திடீரென்று குருந்துமலை பிரதேசத்திற்குள் நுழைந்த தேரர் ஒருவர் நமது மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த கோயில் இருந்த இடத்தில் விகாரை ஒன்றை நிர்மாணிக்க தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நமது மக்கள் பயிர் செய்து வந்த வயற்காணிகள் மற்றும் சேனைக் காணிகளில் பல ஏக்கர்களை பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் பிரதேசத்திற்கு கையகப்படுத்திக் கொண்டுள்ளனர். எங்கள் மக்களின் காணிகளை புதிதாக தொல்பொருளியல் பாதுகாப்பு பிரதேசம் என்று பெயரிட்டு கையகப்படுத்திக் கொள்வதன் மூலம் நமது மக்களுக்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது என்றே நாம் கூறுகிறோம். பௌத்த மக்கள் எவருமே வசிக்காத வனப்பிரதேசத்தின் மத்தியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் எதிர்பார்ப்பது என்ன என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
தொல்பொருளியல் திணைக்களத்திற்கு சொந்தமாக இருக்கும் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக மேலும் சுமார் 200 ஏக்கர்கள் அளவில் புதிதாக கையகப் படுத்திக் கொண்டு பாதுகாக்கப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுப் பிரதேசம் ஒன்றை அமைப்பதன் மூலம் தொல்பொருளியல் ஆய்வுத் திணைக்களம் எதிர்பார்ப்பது என்ன?
இந்தப் பிரச்சனையின் ஊடாக மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் அவசியம் யாருக்கு இருக்கின்றது என்று எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் கொஞ்சம் கூழையோ கஞ்சியையோ குடித்து வாழ்வதற்காகவாவது பயிர்ச்செய்கைக்குரிய நிலங்களை விடுவிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
பிரச்சினை குறித்த நிபுணர்களின் கருத்து
தண்ணிமுறிப்பு மக்களின் நில உரிமை மற்றும் குருந்தி விகாரை குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரகனின் கருத்தை வினவியபோது அவர் கூறியதாவது:
"கடந்த காலத்தில் குருந்துமலை என்னும் இடத்தில் தமிழ், பௌத்த மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்பட்ட போதும் நிகழ்காலத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சூழ பௌத்த மக்கள் எவரும் வசிக்கவில்லை. நான் அறிந்த வரையில் குருந்து மலை எனும் இடத்திலிருந்து 15- 20 கிலோமீட்டர் எல்லைக்குள் எந்த ஒரு பௌத்தரும் இல்லை.
தற்காலத்தில் குருந்துமலை என்னும் இடத்துக்கு அண்மையில் தமிழ் மக்களே வசித்து வருகின்றார்கள். சூழவும் அவர்களது வயற்காணிகளே காணப்படுகின்றன. தண்ணிமுறிப்பு கிராமத்து தமிழ் மக்களின் வயற்காணிகள் குருந்துமலை விகாரையிலிருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளன. அம்மக்கள் விவசாயத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்ளும் குளம் கூட தாதுகோபுரத்துக்கு மிக அண்மையிலேயே அமைந்துள்ளது.
பௌத்த விகாரையாகட்டும், இந்துக் கோவிலாகட்டும் இஸ்லாமிய பள்ளிவாசலாகட்டும் கிறிஸ்தவ தேவாலயமாகட்டும் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாயின் குறிப்பிட்ட பிரதேசத்தில் அவ்வவ் மதங்களை வழிபடும் மக்கள் வசித்தல் வேண்டும். அவ்வாறின்றி வழிபாட்டுத் தலங்களை காடுகளுக்குள்ளேயும், மலை முகடுகளிலும் நிர்மாணிப்பதன் மூலம் கிடைக்கும் பயன் யாது என்பது குறித்து கேள்வி எழுகின்றது.
குருந்துமலை என்னும் பிரதேசத்தில் தொல்பொருளியல் நினைவுச் சின்னங்கள் காணப்படலாம். தொல்பொருளியல் ஆய்வுத் திணைக்களத்தினால் அவை பாதுகாக்கப்படல் வேண்டும். ஆயினும், இப்போது அங்கு குருந்துமலை பிரதேசத்தில் புதிதாக தாதுகோபுரம் ஒன்றை நிர்மாணித்தலே நடை பெறுகின்றது. புதிதாக தாது கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் குருந்து மலையைச் சூழ வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அமைதியின்மை உருவாகியுள்ளது.அதன் மூலம் மத நல்லிணக்கத்திற்கும், இன நல்லுறவுக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படலாகாது.
வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் மற்றும் கோயில்களை நிர்மாணிக்கப்படுவதில் உள்ள பிரச்சினை
யுத்தத்திற்குப் பிறகு கடந்த மூன்று, நான்கு வருடங்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதிதாக பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், புதிய தாது கோபுரங்களை அமைத்தல், புதிதாக தியான மண்டபங்களை நிர்மாணித்தல் மற்றும் புதிதாக கோவில்கள் நிர்மாணித்தல் போன்றன பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன என்பது வடக்கைச் சேர்ந்த நடுநிலையாளர்களின் அபிப்பிராயமாகும்.
முல்லைத்தீவு குருந்தி தாதுகோபம் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திஸ்ஸ தாது கோபம், நெடுங்கேணி வெடுக்குனாரி கல்மலையில் நிறுவப்பட்டுள்ள புதிய சிவன் கோவில் போன்ற வழிபாட்டுத்தலங்கள் கடந்த நான்கு வருட காலத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், அதனூடாக இனங்களுக்கிடையே ஓர் ஒற்றுமையின்மை உருவாகி வருவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.
குருந்தி தாதுகோப பிரச்சினை ல் காங்கேசன்துறை திஸ்ஸ தாது கோபம், வெடுக்குனாரி சிவன் கோவில் போன்ற மேலும் புதிய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிப்பதன் மூலம் மீண்டுமொரு தடவை இனங்களுக்கிடையில்/மதங்களுக்கிடையில் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம் என்று நடுநிலையாளர்கள் வேண்டுகோள் விடுகின்றார்கள்.