
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கான கடிதம்-
Published
15 ஜனவரி 2019
கனம் ஜனாதிபதி அவர்கட்கு,
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கண்காணிக்கும் ஜனாதிபதி விசேட செயலணியுடன் நடத்திய சந்திப்பில் “வடக்கு கிழக்கில் உள்ள காணிகளில் காணப்படும் சகல பிரச்சினைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை அசல் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்”என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி அறிக்கையிட்டிருந்தது.
நீங்கள் வழங்கிய இந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு கோரி வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள், அக்கறையுள்ள நபர்கள் மற்றும் அமைப்புக்கள் உங்களுக்கு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தன.
எனினும், இன்றுவரை எமது அந்தக் கடிதத்துக்கு பதில் வழங்கப்படவில்லையென்பதுடன், பல தாசப்தங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள காணிகளின் உரிமையாளர்களின் பெருமளவு நிலப்பரப்புக்களுக்கு நுழையமுடியாதுள்ளது.
எனவே நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டை பூர்த்திசெய்யுமாறு நாம் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கோரிக்கைவிடுக்கின்றோம். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவு கிராமத்திலுள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில் நாம் விசேடமாகச் சுட்டிக்காட்டுகின்றோம். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் கிராமத்தின் சில காணிகள் விடுவிக்கப்பட்டபோதும், பல ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் களப்பை அண்டியதாக வாழ்வாதாரத்தைக் கொண்டவர்களின் காணிகள், விவசாயக் காணிகள், கிராமப் பாடசாலை, தேவாலயம், இந்துக் கோவில் மற்றும் மயானம் என்பன உள்ளடங்குகின்றன.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 22 மாதங்களாக இராணுவ முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் இரவு பகலாக தொடர்ச்சியான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களையும் நடத்திவருகின்றனர்.
தமது காணிகள் விடுவிக்கப்படும்வரை சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இக்கிராமத்தின் தலைவர்கள் கடந்த காலத்தில் அச்சுறுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையில் நீங்கள் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாது, காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாமலிருந்தால் அவர்கள் மோசமான நடவடிக்கையை எடுக்கலாம் என நாம் கவலையடைகிறோம்.
அவர்கள் அவ்வாறான இறுதிநிலைக்குத் தள்ளப்படுவதற்கு முன்னர் நீங்கள் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய, விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவிக்குமாறு நாம் மீண்டும் கோரிக்கைவிடுக்கின்றோம்.
உண்மையுள்ள,
காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி