
இரணைதீவினை அணுக மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்தல்
Published
கிளிநொச்சி மாவட்டத்தின் புனகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இரணைதீவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இரணைதவானது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அதாவது வடக்கு மற்றும் தெற்கு தீவுகளாக பிறிக்கப்பட்டுள்ளது. இவ் இரண்டு பகுதிகளும் சுமார் 0.5 கி.மீ அகலமுள்ள மணல் மேட்டினால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இரணைதீவின் பெரிய தீவு வடக்கு பக்கமாக அமைந்துள்ளதோடு அதன் அளவு 4.22 சதுர கிலோமீட்டர்கள் மற்றும் இரணைதீவு சிறிய தீவு தெற்கு அமைந்துள்ளதோடு அதன் அளவு 1.17 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்திலிருந்து 1992 வரை இத் தீவில் நிரந்தரமான மக்கள் குடியேற்றங்கள் காணப்பட்டது. பாடசாலை, தேவாலயம், உள்ளூராட்சி மன்ற அலுவலகம் போன்றவை இத் தீவில் நிறுவப்பட்டிருந்தன. 1992ஆம் ஆண்டு நிலவரப்படி, தீவின் மையப் பகுதியில் நெல் விவசாயம் மற்றும் பயிரிடல் மற்றும் கால்நடை வளர்ப்பு (மாடு மற்றும் ஆடு) ஆகியவற்றுடன் சுமார் 245 மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன.
தீவில் அமைக்கப்படவுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இங்கு வசிக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். தீவில் வசிக்கும் சுமார் 178குடும்பங்கள் ஸ்வர்ண பூமி உறுதி பத்திரங்களை கொண்டவர்களாக இருந்தனர்.
1992 ஆம் ஆண்டு யுத்த சூழல் கடுமையாக இருந்ததால் மக்கள் அனைவரும் தீவை விட்டு வெளியேறி மன்னார், இரணமாதா நகர் பகுதியில் குடியேறியுள்ளனர். அதனையடுத்து, மீனவர் குழுக்கள் காலத்திற்கு காலம் இரணைதீவுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதுடன், கடற்படையினர் 49 மீனவர்களை படகுகளுடன் கைதுசெய்து, அடித்து, சிறைபிடித்ததன் காரணமாக, யுத்த காலத்தில் இரணைதீவு மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக கைவிடப்பட்டன.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர், கடற்படை இந்த முழுத் தீவையும் கைப்பற்றி 4 இடங்களில் முகாம்களை அமைத்தது. மேலும், காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வடக்குத் தீவிற்கு மீனவர்கள் வருவதை கடற்படையினர் தடை செய்துள்ளதுடன், தெற்கு பக்கம் உள்ள தீவில் மாத்திரம் 36 மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு இரணைதீவுப் பகுதியில் கடற்தொழில் நடவடிக்கைக்கு கடற்படையினர் தடை விதித்ததாலும், அதற்கு தடையில்லை என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகம் அறிவித்ததால் மீனவர்கள் பலவந்தமாக தீவிற்குள் நுழைந்து மீன்பிடிக்க ஆரம்பித்தனர். தற்போது 63 குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து மீன்பிடி தொழில் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நிரந்தர கட்டுமானம் அல்லது கட்டுமான பொருட்களை தீவிற்குள் கொண்டு செல்வதற்கு கடற்படை அனுமதியளிப்பதில்லை.
2019 ஆம் ஆண்டில், தீவின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக, மபுர்ஜா நிறுவனத்தின் மூலமாக குழாய் நீர் வசதிகள் வழங்கப்பட்டன, ஆனால் இன்றைய நிலவரப்படி, அவை அனைத்தும் புனரமைக்க முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்தாலியில் இருந்து மானியமாக பெறப்பட்ட குடிநீர் வடிகட்டுதல் முறையை தீவுக்குள் கொண்டு செல்ல கடற்படை அனுமதியளிப்பதில்லை. தற்போது இந்த கருவிகள் இரணமாதா நகரின் மீனவர் துறைமுகத்தில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் வைக்கப்படுள்ளது.
கடந்த காலங்களில் இரணைதீவு கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து ஸ்வர்ண பூமி காணி உறுதி பத்திரங்களை வைத்திருந்தவர்களில் 19 புதிய ஸ்வர்ண பூமி காணி உறுதிகளை வழங்கியுள்ளனர். தற்போது குடியிருப்போரின் பெற்றோர் பெயரில் குறித்த பத்திரங்கள் இருப்பதால் மற்றவர்களுக்க அந்த பத்திரங்களை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தங்கப் ஸ்வர்ண பூமி உறுதி பத்திரங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த முதியவர்கள் பலர் இறந்துவிட்டதால், பிள்ளைகளின் பெயரில் பத்திரங்களைத் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 2 மீனவக் குடும்பங்கள் பிரதான தீவு அல்லது வடக்குத் தீவில் வீடுகளைக் கட்டி நிரந்தரமாக குடியேறியுள்ள நிலையில், ஏனைய ஸ்வர்ண பூமி உறுதி பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு நிரந்தர வதிவிற்கான அல்லது வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பை கடற்படையினர் வழங்குவதில்லை.
ஆனால் பிரதேச செயலாளரும், மாவட்ட செயலாளரும் அவ்வாறான எந்தவித தடையுமில்லை என மக்களிடம் கூறி வருகின்றனர்.
ஆனால் கடற்படையினர் எந்தவொரு கட்டுமானப் பொருட்களையும் தீவிற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். “எங்கள் நிலங்களில் வீடுகள் கட்டி மீன்பிடி மற்றும் விவசாய வயல்களில் தோழில் செய்துகொண்டு வாழ விரும்புகிறோம். ஆனால் இந்திய நிறுவனமான அதானிக்கு இந்த தீவில் சூரிய ஒளி மின் நிலையம் மற்றும் காற்று மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் கடற்படை எங்களை குடியேர அனுமதிக்கவில்லை. ஒரு நிறுவனத்தின் தேவைக்காக நாங்கள் எங்கள் நிலங்களை, எங்கள் தீவுகளை, எங்கள் கடலை இழந்துள்ளோம். அதானி நிறுவனத்திற்காக கடற்படையும், அரசும் எங்களை எங்கள் எல்லைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. எங்களுக்கு அங்கு வாழ அனுமதி இல்லை. தற்போது இரணைதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் படகுகளில் வந்து சட்டவிரோதமாக டோலர் படகுகளை உபயோகித்து மீன்பிடித்து வருகின்றனர். அது கடலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இவை எதையும் கட்டுப்படுத்தாமல், தீவுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்து, ஆதரவற்றவர்களாக ஆகியுள்ளோம்". இது இரணைதீவு மீனவர்களின் கருத்து.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் படி அடிப்படை உரிமைகள் பிரிவில் காட்டப்பட்டுள்ளபடி இரணைதீவு கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளான சட்டபூர்வமான தொழில், கைத்தொழில் அல்லது விருப்பமான இடத்தில் வாழ்வதற்கான உரிமையில் தலையிடும் வகையில் கடற்படையினர் செயற்பட முடியாது. மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, சட்டத்தின் பயன்பாடும் நடைமுறைப்படுத்தலும், சட்டத்தின் பாதுகாப்பும் நியாயமாக இருக்க வேண்டும் என்ற உரிமைகளின் அடிப்படையில் கடற்படையினரால் மக்களை வற்புறுத்த முடியாது.
1948 ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல புள்ளிகளுக்கு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்ற நாடு என்ற வகையில் இலங்கை இந்த மனித உரிமைகளை கடைபிடிக்க வேண்டும். இப் பிரகடனத்தின் பிரிவு 1 இன் படி, ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமானவர்கள். 6 ம் பிரிவின் படி, எல்லா வகையிலும் சட்டத்தின் முன் ஒரு நபராக கருதப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. மேலும், 7ம் பிரிவின் படி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் இரணைதீவு மக்களின் மீன்பிடி நடவடிக்கைகள் அனைத்தையும் கடற்படையினர் பறித்துள்ளனர்.
இக் குறைபாடுகள் அனைத்தும் நாடுகளுக்கிடையிலான ஆதரவை சிதைக்கும், நாட்டின் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை சீர்குலைத்து, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதை அறியாத அரசாங்கம், அவர்கள் நிறுவனங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ள நிலங்களை கடற்படையைப் பயன்படுத்தி மக்களை பயன்பாட்டிலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறது. எனவே, நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெறுவதற்கு இந்நிலைமைக்கு எதிராகச் செயற்படுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் பொறுப்புமாகும்.
சஜீவ சாமிகர