
ஜனாதிபதி செயலணிகள் தொடர்பிலான அறிக்கை
Published
Image Credit- News Wire
15 ஆனி, 2020
ஜனாதிபதி செயலணிகள் தொடர்பிலான அறிக்கை
இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள சிவில் சமூகத்தை சார்ந்த நாம், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் ஜனாதிபதி செயலணிகள்; தொடர்பில் அவதானித்து வருகின்றோம்.
கொவிட்-19 சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் மூன்று ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். இவற்றில் ஒரு செயலணிக்கு ஒட்டு மொத்த சமூக வாழ்விற்கு நிலையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான முன்னெடுப்பு, ஒருங்கிணைப்பு, மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ள பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உருவாக்கப்பட்ட மற்றைய இரு ஜனாதிபதி செயலணிகளாவன, பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பவும், கட்டுப்பாடான ஒழுக்கம் மிக்க மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்குமான செயலணி (வர்த்தமானிப் பத்திரிகை இல. 2178/18 மூலமாக ஸ்தாபிக்கப்பட்டது) மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரீதியிலான முகாமைத்துவத்திற்கான செயலணி (வர்த்தமானிப் பத்திரிகை இல. 2178/17 மூலமாக ஸ்தாபிக்கப்பட்டது). இவை இரண்டும் ஜுன் 2, 2020 உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே உருவாக்கப்பட்டு இயங்கிவரும் தொல்பொருள் திணைக்களத்தை புறக்கணித்து, இச்செயலணிகள் பரந்த மற்றும் தெளிவற்ற ஆணைகளை கொண்டுள்ளதோடு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நிலையில் அவற்றின் செயற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுவதை மேற்பார்வை செய்ய முடியாத ஓர் காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்படும் வேளையில் விசேட அதிகாரங்களை பயன்படுத்த தகுந்த மற்றும் வலுவான காரணங்கள் காட்டப்பட வேண்டும். முன்னொருபோதும் நிகழாத விதத்தில் சுகாதார, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காணப்படும் ஒரு கட்டத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரீதியிலான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய ஓர் விடயமாகும்.
இச்செயலணிகளின் உறுப்பினர்களில் மிக பெரும்பாலானவர்கள் சிங்கள சமூகத்தை சார்ந்தவர்களாவர். கிழக்கு மாகாணத்தில் பரவலாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினரை புறக்கணித்துவிட்டு அதிகளவிலான பௌத்த மதகுருக்களை இம்மாகாணத்திற்கான செயலணி கொண்டுள்ளது. இச்செயலணிகள் மேற்குறிப்பிட்ட சமூகங்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது செயற்படும் சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றது. அத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பெரும்பான்மை போக்கையே இவை பிரதிபலிக்கின்றன.
மேலும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக நாடு ஸ்தம்பிதமடைந்து காணப்பட்ட நிலையில் இவற்றின் உருவாக்கம் குறித்து மக்களின் கருத்துக்கள் எதனையும் உள்வாங்காது ஸ்தாபிக்கப்பட்டன.
சகல ஜனாதிபதி செயலணிகளும் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கியுள்ள அதேவேளை பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்பவும் கட்டுப்பாடான ஒழுக்கமிக்க மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்குமான செயலணியில் முற்றுமுழுதாக இராணுவ மற்றும் காவற்துறைப் பிரதிநிதிகளே உள்ளடங்கியுள்ளனர். மேலும் நவம்பர் 2019 ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இலங்கையின் சுகாதாரம், கல்வி, அபிவிருத்தி மற்றும் பொது நிர்வாகத் துறைகள் மட்டுமல்லாது நீதித்துறையிலும் உள்ள சிவில் செயற்பாடுகள் இராணுவமயமாக்கப்படுதலுக்கான நிலையான நகர்வு தென்படுகின்றது. இது நீண்டகாலமாக நிலைத்துவரும் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஓர் இடராகும்.
இலங்கையின் ஜனநாயக பொறிமுறைகள், அரசியல்மயம் மற்றும் இராணுவமயமாக்கபடாமல் திறம்பட செயற்படுதல் அவசியம். இப்புதிய செயலணிகள் ஜனாதிபதியிடம் மாத்திரமே பொறுப்புக்கூறும் கட்டமைப்புக்களாகும். அத்துடன் துறை சார் அனுபவத்தைக் கொண்ட சிவில் சேவை அதிகாரிகளை கொண்டிராது, சிவில் சேவைகளில் எவ்வித அனுபவமுமற்ற பாதுகாப்புப்படை பணியாளர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் காவல்துறையைப் போல சிவில் சேவையை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதோடு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியமான அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளை அபகரிக்கின்றன. இச்செயலணிகளுக்கு பதிலாக, 19வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு அனைத்து கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் முறைமையானது, சுதந்திரமான மற்றும் செயற்திறன் மிக்க மேற்பார்வையிடல் பொறிமுறையாகும். இக்காலக்கட்டத்தில் நாடு எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகளை இப்பொறிமுறையினூடாக எதிர்கொள்ளலாம். அத்துடன் அரசானது செலவுகளை கட்டுப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டிய இக்காலத்தில், இச்செயலணிகளின் பணிகளுக்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகின்றது, எந்த அளவிற்கு அமைச்சுக்களின் பணிகளையே இவை மீளவும் செய்கின்றன, மற்றும் மேலதிகமான செலவுகளை ஏற்படுத்துகின்றனவா என்பது தொடர்பாக தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. கொவிட்-19 தொற்று நோய்க்கு பின்னர், இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில், ஏற்புடையதான, அனைவரும் உள்ளடக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளை பின்பற்றி இந்நெருக்கடிக்கு வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் முகங்கொடுத்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இந்நெருக்கடிக்கு இராணுவமயம் சாக்கல்ல, மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்திற்கு இராணுவமயமாக்கல் தீர்வுமல்ல. அத்துடன் ஓர் செயல்படும் ஜனநாயகத்தில் பிரதமர், அமைச்சரவை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றத்தை புறக்கணிப்பதும் தீர்வாகாது.